இங்கிலாந்து எம்பி பரபரப்பு முஸ்லிம் பெண் என்பதால் அமைச்சர் பதவி பறித்தனர்

லண்டன்: இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பெண் எம்பி.யான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நஸ்ரத் கனி (49) ‘தி சன்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2018ல் முன்னாள் பிரதமர் தெரசா மே தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை இணை அமைச்சராக நான் பதவி வகித்தேன். கடந்த 2020 பிப்ரவரியில் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றதும், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது எனது பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் நடந்த கூட்டத்தில் கட்சி கொறடாவிடம் எனது பதவி பறிப்பு குறித்து காரணம் கேட்டேன்.

அதற்கு அவர் அமைச்சரவை மாற்றத்திற்கான உயர்மட்ட கூட்டத்தில், நான் ‘முஸ்லிம்’ என்பது ஒரு பிரச்னையாக எழுப்பப்பட்டதாக கூறினார். கட்சிக்கு எதிரான முஸ்லிம் வெறுப்பு குற்றச்சாட்டுகளில் நான் கட்சியை பாதுகாக்க தவறிவிட்டதால் எனது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கூறினார். இது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. இந்த சம்பவத்தால் கட்சியின் மீதான நம்பிக்கையை இழந்தேன்.

இந்த விஷயத்தை பெரிதாக்கினால் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் இதை சொல்லவில்லை. ஆனால், இதற்கான சரியான நேரம் வரும் என காத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் இங்கிலாந்து அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. ஆனால், நஸ்ரத்தின் குற்றச்சாட்டுகள் பொய் என கட்சிக் கொறடா ஸ்பென்சர் கூறினார். இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் முறையான புகார் தந்தால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும், அதை நஸ்ரத் செய்ய மறுப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories: