படை முகாமில் துப்பாக்கிச் சண்டை பர்கினா பசோவில் ராணுவ புரட்சி?

வாகடோகு: மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினோ பசோவில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளின் நாசவேலைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, அதிபர் ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ராணுவ வீரர்களும் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தலைநகர் வாகடோகுவில் உள்ள ராணுவ படை முகாமில் நேற்று அதிகாலை முதல் திடீரென பயங்கர துப்பாக்கி சத்தங்கள் கேட்டன. நீண்ட நேரம் துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியை கைப்பற்ற ராணுவம், ராணுவ புரட்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.  

இதனால் பதற்றம் நிலவியது. இத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்தது. அதிபர் தடுக்கப்படவில்லை, ராணுவம் ஆட்சியை கைப்பற்றவில்லை என பாதுகாப்பு அமைச்சர் சிம்போரே தெரிவித்தார். சில அதிருப்தி ராணுவ வீரர்கள் படை முகாமில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அங்கு நிலைமையை சீர் செய்ய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் நிலையில், இந்த சம்பவம் பர்கினா பசோ நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: