அருணாச்சல பிரதேச எல்லையில் மாயமான சிறுவனை ஒப்படைக்க சீன ராணுவம் சம்மதம்: நடைமுறை முடிய 10 நாட்களாகும்

புதுடெல்லி: அருணாசல பிரதேச மாநில எல்லையில் காணாமல் போன சிறுவன் சீனா ராணுவத்தின் பிடியில் இருக்கிறான். அவனை 10 நாட்களுக்குள் ஒப்படைப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.இந்நிலையில், இம்மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்ரா ஆறு சீனாவுக்குள் நுழையும் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, கடந்த புதன்கிழமை 17 வயதான மிரம் தரோமை சீன ராணுவம் கடத்தி சென்று விட்டதாக அம்மாநில எம்பி தபிர் கோ குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் சீன ராணுவத்தை ஹாட்லைனில் தொடர்பு கொண்டு, காணாமல் போன சிறுவனை இருநாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் மிரம் தரோம் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சீன ராணுவம் தகவல் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கமான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் 7 முதல் 10 நாட்களுக்குள் அவனை ஒப்படைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் ஹர்ஷவர்தன் பாண்டே கூறுகையில், ‘மிரம் தரோனை சீன ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அவனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைளை இரு நாட்டு ராணுவமும் மேற்கொண்டுள்ளன.’ என தெரிவித்தார்.

Related Stories: