ஜப்பான் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தும் நேதாஜி அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை செய்யாதது ஏன்? மூடி மறைத்த முகர்ஜி கமிஷன் மீது பேத்தி சந்தேகம்

கொல்கத்தா: ஜப்பான் கோயிலில் பாதுகாக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்தும், அதை முகர்ஜி கமிஷன் புறக்கணித்தது ஏன்? என தற்போது சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவ படையை உருவாக்கி, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காள இந்து குடும்பத்தில் கடந்த 1897ல் பிறந்த அவரது 125வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நேதாஜியின் மறைவானது இன்னமும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. அவர் கடந்த 1945ல் தைவான் நாட்டில் விமான விபத்தில் இறந்ததாகவும், அவரது அஸ்தி, எலும்புகள் ஜப்பானின் ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், நேதாஜியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 1999ல் அமைக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷன், 2005ல் தாக்கல் செய்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், ரஷ்யாவில் சிறையில் அவர் இறந்திருக்கலாம் அல்லது துறவியாக வாழ்ந்து இறந்திருக்கலாம் என கூறியது. இந்நிலையில், நேதாஜியின் சகோதரர் சரத் போசின் பேத்தி மாதுரி போஸ் நேற்று அளித்துள்ள பேட்டியில், முகர்ஜி கமிஷனின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது:

ஜப்பான் ரென்கோஜி கோயிலில் உள்ளது நேதாஜியின் அஸ்தி தானா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த அஸ்தியை மரபணு (டிஎன்ஏ) சோதனைக்கு உட்படுத்த நீண்ட காலமாக அனுமதி கொடுக்காமல் ரென்கோஜி கோயில் நிர்வாகம் இருந்தது. இந்நிலையில், மரபணு சோதனை நடத்துவதற்கு கோயிலின் தலைமை பூசாரி அனுமதி தந்து, இந்திய அரசுக்கு 2005ல் கடிதம் எழுதி உள்ளார். ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு முகர்ஜி கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஆனால், முழு கடிதமும் மொழி பெயர்க்கப்படாமல், பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ரென்கோஜி கோயில் பூசாரி அனுமதி தந்தும், அஸ்தியை டிஎன்ஏ பரிசோதனை செய்யாமலேயே அது நேதாஜியுடையது அல்ல என முகர்ஜி கமிஷன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த கடிதத்தை மீண்டும் புதிதாக மொழி பெயர்த்துப் பார்த்த பிறகுதான் இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது.

கடிதத்தில் மரபணு சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள விஷயங்கள் எதற்காக மறைக்கப்பட்டன? முகர்ஜி கமிஷன் மீது முதலில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அறிக்கையில் உள்ள பல வெளிப்படையான முரண்பாடுகள் அதை மீண்டும் ஆய்வு வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் வாழ்த்து

நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டரில் நேற்று வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘அனைவருக்கும் பராக்கிரம தின வாழ்த்துக்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு நேதாஜி ஆற்றிய மகத்தான பங்களிப்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம்’ என கூறி உள்ளார்.

Related Stories: