×

இந்தியா கேட்டில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறப்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் 3டி ஒளி வடிவ ஹாலோகிராம் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சுதந்திர போராட்டத்தின் போது இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நேதாஜியின் பிறந்தநாளை பராக்கிரம தினமாக கொண்டாடுவதாக ஒன்றிய அரசு கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி, பராக்கிரம தினமாகவும், நேதாஜியை பெருமைபடுத்தும் வகையில், குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நேற்று முதலே தொடங்கப்பட்டன. இதுதவிர, நேதாஜியின் பிரமாண்ட கிரானைட் சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என அறிவித்த பிரதமர் மோடி, அதுவரை 3டி தொழில்நுட்பத்தில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை அந்த இடத்தில் நிறுவப்படும் என தெரிவித்தார்.

இதற்கான, நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறப்பு விழா, இந்தியா கேட் பகுதியில் நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, 30 ஆயிரம் ஒளிக்கதிர்கள் மூலம் 4கே புரொஜெக்டர் கொண்டு 28 அடி உயரம், 6 அடி அகலத்தில் பிரதிபலிக்கப்படும் நேதாஜியின் ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: இந்திய மண்ணில் முதல் சுதந்திர அரசாங்கத்தை நிறுவிய நமது நேதாஜியின் பிரமாண்ட சிலை டிஜிட்டல் வடிவில் இந்தியா கேட் அருகே அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த ஹாலோகிராம் சிலைக்கு பதிலாக கிரானைட் சிலை நிறுவப்படும். இந்த சிலை, ஜனநாயக அமைப்புகளுக்கும், தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கும் அவர்களின் கடமையை நினைவூட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக நாட்டின் கலாசாரத்தையும் பெருமைகளையும் மறைக்க முயன்றவர்கள், சிறந்த மனிதர்களின் பங்களிப்புகளையும் அழிக்க முயற்சித்தனர். சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப், அந்த தவறுகளை நாடு திருத்தி சரி செய்து கொண்டிருக்கிறது. 2047ம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததன் நூறாண்டுகளை எட்டுவதற்குள், புதிய இந்தியாவை கட்டியெழுப்பும் இலக்கு எட்டப்படுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 2019, 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான ‘சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்’ விருதையும், சிலை திறப்பு விழாவில் பிரதமர் வழங்கினார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உட்பட 7 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.


Tags : India ,Kathil Netaji ,PM Modi , India Gate, Netaji's hologram statue unveiled, Prime Minister Modi's participation
× RELATED கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு...