ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவுடன் (33 வயது, 69வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (35 வயது, 5வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (16-14) என டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். அதே உற்சாகத்துடன் அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடிய அவர் 7-6 (16-14), 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 40 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு 4வது சுற்றில் கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ் (22 வயது, 14வது ரேங்க்) 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனி நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரவை (24 வயது, 3வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மேட்டியோ பெரட்டினி (இத்தாலி), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று களமிறங்கிய இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் ஜோடி 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் எலன் பெரஸ் - மேட்வி மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

சாக்கரி அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி (26 வயது, 8வது ரேங்க்) 6-7 (0-7), 3-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் விக்டோரியா அசரெங்காவையும் (பெலாரஸ்), நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: