சொல்லாமல் செல்போன் வாங்கிய மனைவியை கொல்ல கூலிப்படை: ஸ்கெட்ச் போட்ட கணவன் சிக்கினார்

கொல்கத்தா: ரகசியமாக ஸ்மார்ட் போன் வாங்கியமனைவியை கொல்வதற்கு கணவன் கூலிப்படையை ஏவினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரிடம் அவருடைய மனைவி ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி பலமுறை கேட்டார். ஆனால், ராஜேஷ் மறுத்து விட்டார். இதனால், மனைவி ஏமாற்றம் அடைந்தார். பின்னர், தான் டியூஷன் எடுத்து சேமித்து வைத்திருந்த பணத்தில் கடந்த 1ம் தேதி கணவனிடம் சொல்லாமல் கடைக்கு சென்று புதிய ஸ்மார்ட் போனை அவர் வாங்கினார். இதை அறிந்ததும் ராஜேஷ் ஆத்திரம் அடைந்தார். மனைவியை கொலை செய்வதற்காக கூலிப்படையை  ஏற்பாடு செய்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவை மூடி விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற ராஜேஷ், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த மனைவி வெளியே சென்று பார்த்தார். அப்போது, இருட்டில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரை சரமாரியாக தாக்கினர். கழுத்தை கத்தியால் அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவர், உதவி கேட்டு அலறினார். இதை கேட்டு அருகில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட சிலர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் தாக்கிய 2 பேரும் ஓடி விட்டனர்.

அப்பெண்ணை காப்பற்றிய அவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொண்டையில் 7 தையல்கள் போடப்பட்டு உள்ளது. போலீஸ் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய 2 பேரில் ஒருவனான சுராஜ் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில், ராஜேஷ் தனது மனைவியை கொல்வதற்கு போட்ட சதி வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ள போலீசார், தப்பிச் சென்ற நபரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: