இந்த மடம் இல்லன்னா சந்த மடம் டாடா பை பை: கொடி கட்டி பறக்கும் கட்சித் தாவல்

ஒரு காலத்தில், ‘கட்சித் தாவல்’ என்பது அரசியல்வாதிகளுக்கு பெரிய மானப் பிரச்னையாக இருந்தது. இப்போது அதுவே பேஷனாகி விட்டது. வாய்ப்புகளை கோட்டை விடக் கூடாது என்பதே இவர்களின் ஒரே தாரக மந்திரம். தற்போது, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலங்களில் ஒரு கட்சியில் சீட் கிடைக்காதவர்கள், அதற்கு, ‘டாடா... பை பை’ சொல்லிவிட்டு அடுத்த கட்சிக்கு தாவி சீட் வாங்குவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கோவாவில் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ.வுக்கு போட்டியாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களத்தில் இறங்கி உள்ளதால் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில், இங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் 17 இடங்களை வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. ஆனால், 13 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜ, சுயேச்சைகளையும், சிறிய கட்சிகளின் எம்எல்ஏ.க்களையும் வளைத்து போட்டு ஆட்சியை கைப்பற்றியது. பாஜ.வின் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த நிலையில், 2019ம் ஆண்டு அவர் இறந்ததால் பிரமோத் சாவந்த் முதல்வரானார். அப்போது முதலே கோவாவில் கட்சித் தாவல் சகட்டுமேனிக்கு நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் இங்கு 24 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர். மொத்த எம்எல்ஏ.க்களின் இவர்கள் 60 சதவீதம். 2019ம் ஆண்டு சந்திரகாந்த் காவ்லேக்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 10 பேர்  கூண்டோடு பாஜ.வில் இணைந்தனர்.

அதே ஆண்டில் மகாராஷ்டிராவாடி கொமமண்டக் கட்சியின் (எம்ஜிபி)  2 எம்எல்ஏ.க்களும், கோவா பார்வர்டு கட்சியின் ஒரே எம்எல்ஏ.வான ஜெயேஷ் சல்காவ்கரும் பாஜவில் சேர்ந்தனர். இப்படி கட்சி தாவலுக்கு மோசமான உதாரணமாக கோவா திகழ்கிறது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு தேர்தலுக்கு பின் 17 உறுப்பினர்களை கொண்டிருந்த காங்கிரசில் இப்போது 2 எம்எல்ஏ.க்களே உள்ளனர். இந்த தேர்தலிலும் இதுபோன்ற கட்சித் தாவல்கள் நடந்து வருகின்றன.  உத்தர பிரதேசத்தில் வழக்கம் போல் இந்த தேர்தலிலும் கட்சித் தாவல் அதிகளவில் நடந்து வருகின்றன.  

பாஜ அரசில் சீட் கிடைக்காத கோபத்தில் 3 அமைச்சர்கள், 5 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடிக்கு தாவினர். அதேபோல், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரரின் மனைவி அபர்ணா யாதவ்,  முலாயம் சிங் யாதவின் மைத்துனரான பிரமோத் குப்தா பாஜ.வில் சேர்ந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில்  முன்னாள் அமைச்சர் ஹரக்சிங் ராவத் பாஜ.வில் இருந்து வெளியேறி,   காங்கிரசில் இணைந்துள்ளார். பஞ்சாப், மணிப்பூரிலும் இதுபோன்ற கட்சித் தாவல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கோயிலுக்கு அழைத்து சென்று சத்தியம் வாங்கிய காங்கிரஸ்

கடந்த முறை கோவாவில் ஏற்பட்ட கட்சித் தாவல் அனுபவத்தால், இந்தமுறை காங்கிரஸ் ஒரு தந்திரத்தை கையாண்டுள்ளது. இம்மாநிலத்தில் போட்டியிடும் 34 தொகுதிக்கான வேட்பாளர்களை  நேற்று அக்கட்சி அறிவித்தது. அதற்கு முன்பாக, இந்த வேட்பாளர்கள் அனைவரும் கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளுக்கு  அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவரவர் கடவுள்களின் முன்னிலையில், ‘தேர்தலுக்கு பின் கட்சி மாறமாட்டேன்’ என சத்தியம் செய்ய வைத்தனர். அதன் பிறகே, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Related Stories: