வனத்துறை அதிகாரியிடமே யானைத்தந்தம் விற்க முயற்சி: 10 பேர் கும்பல் சிக்கியது

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த ஒரு வீட்டில் ஒரு ஜோடி யானை தந்தம் இருந்தது. இதை விற்பனை செய்ய 10 பேர் கொண்ட கும்பல், பலரிடம் விலை பேசி வந்துள்ளனர். மேலும், யானைத் தந்தம் யார் வாங்குவார்கள்; என்ன விலை என பல்வேறு விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். அந்த கும்பலுக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு வனத்துறை உயரதிகாரியின் செல்போன் நம்பரை யாரோ கொடுத்துள்ளனர். அவர் யார் என தெரியாமல், அவரிடம் யானை தந்தத்தை விற்பது குறித்து கும்பல் விலை பேசியுள்ளது. சுதாரித்த வனத்துறை உயரதிகாரி அவர்களிடம் வியாபாரி போல பேசி நேற்று காலை தேவதானப்பட்டிக்கு கும்பலை வரச்சொல்லி உள்ளார்.

இதன்பேரில், 10 பேர் கொண்ட கும்பல் போடியிலிருந்து வேனில் ஒரு ஜோடி யானை தந்தத்தை எடுத்துக்கொண்டு தேவதானப்பட்டி வந்தனர். இந்நிலையில், வனத்துறை தங்களை பிடிக்க பொறி வைத்திருப்பதை அறிந்த அந்த கும்பல், தப்பிக்க முயன்றனர். ஆனால், வனத்துறையினர் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தி, தேவதானப்பட்டி பைபாஸ் புல்லக்காபட்டி அருகே, வேனை மடக்கி 10 பேர் கும்பலை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்த ஒரு ஜோடி யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: