கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 105 தமிழக மீன்பிடி படகுகள் அடுத்த மாதம் ஏலம்: இலங்கை அரசு அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 மீன்பிடி படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நூற்றுக்கும் ேமற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் தற்போது சேதமடைந்த நிலையில், இலங்கை காங்கேசன் துறை, காரை நகர், தலைமன்னார் மற்றும் கல்பிட்டி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் உத்தரவின்படி, இலங்கை கடல்தொழில் மற்றும் மீன்வளத்துறை தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

\

இதுகுறித்து இலங்கை நாளிதழ்களில் இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை இயக்குநர் எஸ்.ஜெ.கஹாவத்தா பெயரில் ஏல விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகரில் உள்ள 65 படகுகள் பிப். 7ம் தேதியும், காங்கேசன் துறையிலுள்ள 5 படகுகள் பிப். 8ம் தேதி, கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியிலுள்ள 24 படகுகள் பிப். 9ம் தேதி, மன்னார் மாவட்டம் தலைமன்னாரிலுள்ள 9 படகுகள் பிப். 10ம் தேதி, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி துறையிலுள்ள 2 படகுகள் பிப். 11ம் தேதியும் ஏலம் விடுவதாக விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகுகள் முதல் முறையாக இலங்கை அரசால் ஏலத்தில் விடப்படும் நடைமுறை துவங்குகிறது.

முன்பு இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் விசாரணை மற்றும் தண்டனைக்குப்பின் மீனவர்களுக்கு திரும்பக் கிடைத்து வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் தற்போது கடற்படையால் கைப்பற்றப்படும் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடமை  ஆக்கப்பட்டு மீனவர்கள் திரும்பப்பெற முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. இலங்கை அரசு மற்றும் நீதிமன்ற புதிய நடைமுறைகளின்படி வரும் காலத்தில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீன்பிடிப்படகுகள் மீனவர்களுக்கு திரும்பக் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக மீனவர்களின் 105 மீன்பிடிப்படகுகள் இலங்கை அரசால் ஏலத்தில் விடப்படும் தகவல் வெளியாகியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இலங்கை அரசின் முடிவு தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: