திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று சாலையில் வீச்சு: வனத்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அடுத்த  நெடுங்கனூர் காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையோரம் நேற்று காலை ஏராளமான  குரங்குகள் இறந்து கிடப்பதாக திருச்சி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல்  கிடைத்தது. திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்  பேரில் வன சரகர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 6 பெண்  குரங்குகள் மற்றும் 18 ஆண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்து கிடந்தது.  இறந்து கிடந்த  குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி  வைத்தனர்.

மேலும் விசாரணையில் எங்கோ ஒரு பகுதியில் விஷமிகள் குரங்குகளுக்கு  விஷம் வைத்து கொன்று அதனை இந்த பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து  வழக்குபதிந்த வன பாதுகாப்பு அதிகாரிகள், குரங்கிற்கு விஷம் வைத்து கொன்றது  யார் என்பது குறித்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடி மற்றும்  சாலையோர கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: