மாநகர பேருந்தில் பயணம் செய்த சத்துணவு அமைப்பாளரின் பர்சை திருடி வங்கி கணக்கிலிருந்து ரூ.33,500 அபேஸ்: இன்ஸ்பெக்டர் சாதுர்யத்தால் ரூ.4 லட்சம் தப்பியது; சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆசாமிக்கு வலை

சென்னை: சென்னை கோவூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (43), அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக, தண்டையார்பேட்டையில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் வைத்திருந்த மணிபர்சை எடுக்க முயன்றபோது, அது காணாமல் போயிருப்பது தெரிந்தது. அந்த பர்சில் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது.

இதனால், என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்புகொண்டு அந்த பெண்ணின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கியதால், அதில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையனை வலைவீசி  தேடி வருகின்றனர்.

Related Stories: