தலையில் அம்மிக்கல்லை போட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் படுகொலை: சக ஊழியர் வெறிச்செயல்

சென்னை: செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஒழலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜி (எ) விஜயக்குமார்(35) மற்றும் அஜித்(35). இவர்கள்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள  தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸில்  ஓட்டுநராக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு மருத்துவமனை எதிரே பெரியார் நகர் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வறையில் இவர்கள் ஓழலூர்  மற்றும் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ராஜா, தர்மதுரை ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினர். அப்போது, அவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அஜித் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து விஜயகுமார் தலையில் போட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி, அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, ராஜா, தர்மதுரை, அஜித் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில், அஜித் தினமும் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளார். இதைப்பார்த்த விஜயக்குமார் அஜித்திடம், `உன்னை ஓனரிடம் மாட்டிவிடுகிறேன்’ எனச்சொல்லி மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அஜித் அவரை உயிரோடுவிட்டால் தன்னைப்பற்றி ஓனரிடம் கூறிவிடுவார் என அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அஜித்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: