சென்னையில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க 65 பேர் கொண்ட குழு: இன்று முதல் வாகனங்களில் ரோந்து; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க 65 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவினர் இன்று முதல் வாகனங்களில் ரோந்து சென்று, அபராதம் விதிப்பார்கள் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் படுகாயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கின்றனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொண்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்ளுக்கு ரூ.1550 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், சென்னையின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, வாலாஜா ரோடு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, கோயம்பேடு பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு  மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சிறப்பு குழு அமைப்பது, வாகனங்களில் ரோந்து சென்று சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 65 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முதற்கட்டமாக இன்று திருவல்லிக்கேணி, அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு போன்று சென்னை முழுவதும் வாகனங்களில் ரோந்து சென்று சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்பாக ராயபுரம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது 65 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிப்பார்கள். இந்த அபராத தொகையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், உரிமம் கோரப்படாத மாடுகளை கோ சாலையில் ஒப்படைக்கப்படும். மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்,’’ என்றனர்.

Related Stories: