9400 ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரலில் நடக்கும்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைகளில் நடப்பு ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9 ஆயிரத்து 494 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2வது வாரத்தில் நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களையும், உயர் கல்வித்துறையில் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் காலிப் பணியிடங்களையும், நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, தகுதி பெற்றோர் பட்டியல்களை  தயார் செய்து மேற்கண்ட துறைகளுக்கு கொடுக்கும்.

அந்த பட்டியலில் உள்ள தகுதியன நபர்களுக்கு மேற்கண்ட இரண்டு துறைகளும் பணி நியமனங்களை வழங்கும். இதன்படி, 2022ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளின் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்துள்ளது. அந்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். அதில் முதுநிலை படத்தாரிஆசிரியர்களுக்கான பணியிடங்கள் 2407 உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 2 அல்லது 3வது வாரத்தில் நடக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 3902 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4989 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ,ஜூன் மாதம் 2வது வாரத்தில் தகுதித் தேர்வு நடத்தப்படும். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு தேவையான 167 விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். அதற்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் வது வாரத்தில் நடக்கும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1334 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகும். ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட சான்று சரிபார்ப்பு  நடக்கும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 உதவி விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். நவம்பர் 2வது வாரம் தேர்வு நடக்கும். பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி ப் பேராசிரியர் பணியிடங்கள் 104 பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். போட்டித் தேர்வு டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் நடக்கும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: