இரவில் வாட்டி வதைக்கும் குளிர் காற்று, பனி பகலில் புரட்டி எடுக்கும் வெயிலின் தாக்கம்

* இதுவரை பார்க்காத குளிர் என சென்னை மக்கள் தகவல்

* காய்ச்சல், உடல்வலி தொல்லையில் மக்கள்

* மருத்துவ பரிசோதனை முக்கியம் என டீன் பேட்டி

சென்னை: வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வந்த நிலையில், குளிர்க் காற்றும், பனியும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே குளிர்க் காய்ச்சல்(சுரம்) பாதிப்பாலும் மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி தொடங்கி ஜனவரி மாத இறுதி வரையில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு புயல்கள் ஏதும் உருவாகவில்லை. வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் குறைந்தபட்சம் நான்கு புயல்களாவது உருவாகி, தமிழகத்தின் வழியாகவோ அல்லது ஆந்திரா-ஒடிசா இடையிலோ கரை கடந்து சென்று பெரும் பாதிப்பை உருவாக்கும். இந்த நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து புயல் என்று ஏதும் உருவாகவில்லை. குறிப்பாக 4 முறை புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டு காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலம் என்று உருவாகியதே தவிர புயல்கள் ஏதும் பெரிதாக உருவாகவில்லை. இருப்பினும், புயல்களால் பெய்ய வேண்டிய மழையைப் போலவே, மேற்கண்ட காற்றழுத்தங்கள் மழைக் கொடுத்து, இயல்பைவிடு கூடுதலாகவே மழை பெய்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுவிட்டது. டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி முதல் வாரம் பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு தமிழகத்தையும் தமிழக தலைநகரான சென்னையையும் திக்குமுக்காட  வைத்துவிட்டன.

எதிர்பாராத பெரும் மழை பெய்து சென்னை வெள்ளக்காடாகி தத்தளித்தது. மழை வருவதை முன்கூட்டியே தெரிவிக்க முடியாத அளவுக்கு கருவிகள் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு இந்த பெரு மழை தமிழகத்தை மிரட்டிவிட்டு சென்றுள்ளது. புயலுக்கு பின்னே அமைதி என்று கூறுவதைப் போல, இந்த பெருமழைக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடக்கே இமய மலைப்  பகுதியும் அதை ஒட்டிய பகுதிகளில் மைனஸ் 20 டிகிரி வரையிலான உறைபனிச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் புதுடெல்லியில் பனிப்பொழிவு ஏற்பட்டு முன்னே செல்லும், வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. இமய மலைப் பகுதியில் இருந்து வடகிழக்கு திசையில் இருந்து கொல்கத்தாவை ஒட்டிய பகுதி வழியாக வங்கக்கடல் ஊடாக தெற்கு நோக்கி வீசும் குளிர் காற்று ஒடிசா, ஆந்திரா, தமிழகப் பகுதியில் நுழைந்து குளிர்வித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக காலை, இரவு நேரங்களில் கடுங்குளிருடன் கூடிய பனிப் பொழிவு நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் உள்பட 40 மாவட்டங்களில் 203 சதவீதம் இந்த பருவத்தில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் உள்பட தமிழகத்தில் 40 மாவட்டங்களில்  32 மாவட்டங்களில் மிக கூடுதல் மழை பெய்துள்ளது. 3 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது. 2 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது. 1 மாவட்டத்தில் மட்டும் மிக குறைவான அளவில் பெய்துள்ளது. அதே போல வெப்ப நிலையை பொருத்தவரையில் கரூர் பரமத்தியில் குறைந்தபட்சமாக 16.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. ஊட்டியில் 4.9 டிகிரி செல்சியஸ், என மலைப் பிரதேசங்களில் வெப்ப நிலை நிலவி வருகிறது.

ஜனவரி 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், 16 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நீடிக்கும். வட மாநிலப் பகுதியில்  இருந்து வீசும் குளிர்க் காற்றின் காரணமாக தமிழகத்தில வெப்ப நிலை குறைந்து காணப்படுவதுடன் காலை இரவு நேரங்களில் கடுங்குளிருடன் கூடிய பனிப்பொழிவு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த குளிர் காற்று மற்றும் பனிப் பொழிவின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவில் கடுமையான குளிரை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்கள் காலை நேரங்களில் பனிப்பொழிவையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குளிருடன் கூடிய காய்ச்சல்(சுரம்) தாக்கி வருகிறது. ஒரு புறம் கொரோனா, ஒமிக்ரான் தொற்று பயமுறுத்தி வரும் நிலையில், குளிர் காற்றின் காரணமாக திடீரென ஏற்படும் காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தும்மல் என்று எல்லா வகையிலும் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த திடீர் காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியவர் என, யாரையும் விட்டு வைக்காமல் தாக்குவதுதான்  பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த காய்ச்சல் வந்தால் உடல் வலியும், சளியும் அதிகரித்து இருமலுடன் கூடிய காய்ச்சல் வாட்டி வதைக்கிறது.

இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இது குறித்து சென்னை மக்கள் கூறும்போது, கடந்த 10 ஆண்டு காலத்தில் இதுபோன்று பனி பொழிவை பார்த்தது இல்லை. மாலையில் தொடங்கி மறுநாள் காலை 11 மணி வாட்டி வதைக்கிறது. மாவட்டங்களின் உள் பகுதிகள், மலைப்பகுதிகளில் சுற்றி உள்ள நகரங்களில் இதுபோல இருப்பது வழக்கம், கடல் காற்று வீசும் சென்னையில் எங்களுக்கு இந்த குளிர் புதுவிதமாக இருக்கிறது.

இது  குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனையின் தலைவர் தேரணிராஜன் கூறியதாவது: தற்போது உடல் வலியுடன் காய்ச்சலில் பாதிக்கப்படுவது என்பது கொரோனா பாதிப்பு அல்லது ஒமிக்ரான் பாதிப்பால் இருக்கலாம். இது தவிர, யானைக்கால் சுரம், நிமோனியா காய்ச்சல், சிறுநீரக தொற்று, போன்ற காரணங்களாலும் குளிர்க் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதில் எந்த வகையான காய்ச்சல் என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதித்த பிறகே முடிவு செய்ய முடியும். பொதுவாக இப்போது பெரும்பாலான மக்களுக்கு வருவது கொரோனா, ஒமிக்ரான் தொற்றாக இருக்கிறது. அதனால் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: