என்னை பொறுத்தவரை நம்பர்-1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலை வர வேண்டும்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வாரிய தலைவருமான பூச்சி எஸ்.முருகன் இல்லத் திருமணத்தைத் தலைமை ஏற்று நடத்திவைத்து, மணமக்கள் எம்.அருணா (எ) ஸ்ரீ- எம். அசோக் சக்கரவர்த்தி ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருக்கிறது. அரசினுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கும் பூச்சி முருகனை நான் நெஞ்சார பாராட்டுகிறேன், பூச்சி முருகனை எனக்கு தெரிவதற்கு முன்பு, அவருடைய தந்தை நடித்த அந்த நாடகத்தில், நானும் இணைந்து நடித்தேன் என்பது எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது.

நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசுகிற போது, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி, ஒப்பிட்டுச் சொல்லி, அதில் முதல் முதலமைச்சராக - நம்பர்-1 முதலமைச்சராக இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார். என்னை பொறுத்தவரை நம்பர்-1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம், எனவே அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் முதலில் மணமக்களை வாழ்த்துவதற்கு முன்பு பூச்சி முருகனை வாழ்த்த வேண்டும்.

காரணம் என்னவென்று சொன்னால், முதலில் இங்கு பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள், வீட்டு வசதி வாரியத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பூச்சி முருகனுக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இன்றைக்கு அவருடைய அருமை மகள் கலைமாமணி, அதில் கலைமாமணி பற்றிய இன்னொரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் நமக்கு வர இருக்கிறது. அவர் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற இருக்கிறார். அவர் ஐ.ஏ.எஸ்-ஆக வருகிறபோது நம்முடைய ஆட்சியிலேயே அவர் ஒரு பொறுப்பேற்று பணியாற்றும் அந்த வாய்ப்பும் அவருக்கு வரவிருக்கிறது.

நான் இந்தத் திருமணத்தில் ஒரு வேண்டுகோளையும் எடுத்து வைக்க விரும்புகிறேன். அந்த வேண்டுகோள் என்னவென்றால், நம்முடைய முருகன் பெயருக்கு முன்னால் ‘பூச்சி’ என்ற ஒரு அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது. ‘பூச்சி’ என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஷப் பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற அந்த நிலையிலிருந்து நம்முடைய பூச்சி முருகன் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பூச்சி முருகனை பற்றி சொல்லவேண்டுமென்றால், எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்தோடு, இவரா இப்படி பணியாற்றுகிறார் என்று எண்ணும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய பூச்சி முருகன்.

எனவே அவருடைய பெயரை நாம் இன்றைக்குப் பூச்சி முருகன் என்றும், சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன்.. முருகன்.. என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. துரைமுருகன் அவர்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். எனவே இந்த மணவிழாவில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பது தான் அந்த வேண்டுகோள். தலைவர் கலைஞர் எனக்கு முதலில் என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால், ‘அய்யாதுரை’ என்று தான் பெயர் சூட்ட நினைத்தார்கள். ‘ஐயா’ என்றால் யார் என்று தெரியும், தந்தை பெரியார். ‘துரை’ என்றால், அண்ணாவின் பெயருக்குப் பின்னால் வரும் துரை என்று சேர்த்து வைக்க வேண்டும் என்று கருதி இருந்தார்கள்.

ஆனால் ரஷ்யாவில் ஸ்டாலின் இறந்தபோது, கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு துண்டு சீட்டை கலைஞர் இடத்தில் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டு சீட்டில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று சொன்னால், உங்களுக்கு ஒரு பையன்-மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி. அதைப் படித்துப் பார்த்த தலைவர் கலைஞர் அங்கேயே எனக்கு பெயர் சூட்டினார். எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான், அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறார், இது வரலாறு. என்னுடைய அண்ணன்கள் மு.க.முத்துவாக இருந்தாலும், அழகிரியாக இருந்தாலும், தம்பி தமிழரசாக இருந்தாலும், தங்கை கனிமொழியாக இருந்தாலும், செல்வியாக இருந்தாலும் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் தான்.

அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. என்ன காரணம் என்றால், மு.க.முத்து - அவருக்கு அந்தப் பெயர் வைத்ததற்கு காரணம், என்னுடைய தாத்தா-தலைவருடைய தந்தை முத்துவேல் அவருடைய நினைவாக வைக்கப்பட்ட பெயர். அதேபோல அழகிரி - பட்டுக்கோட்டை அழகிரிசாமியை பாத்துத்தான் நான் பேச்சாளராகவே ஆனேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அவர் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார். என்னுடைய பெயரை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தலைவர் கலைஞர் என் தம்பிக்கு தமிழ் என்று பெயர் சூட்டினார்.

இதுதான் வரலாறு. எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைக்கு மணமக்களாக வீற்றிருக்கும் நிச்சயமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். எனவே அப்படிப்பட்ட தமிழை வளர்க்கின்ற முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு, எம்பிக்கள் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: