நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தல் கையேடு வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரணத் தேர்தல்களை நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளது. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களுக்கான   விதிமுறைகள், வேட்புமனுக்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வேட்பாளர் கையேட்டை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல், தகுதி, தகுதியின்மை, வேட்புமனுதாக்கல், காப்புத்தொகை விவரம், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனுக்களை திரும்ப பெறுதல், சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை, வாக்கு சேகரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், வாக்குசாவடி முகவர்களின் கடமைகள், வாக்குகளை எண்ணுதல் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: