சென்னையின் 4 மண்டலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது: செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா தாக்கம் தற்போது இறங்கியுள்ளது. ஆனாலும் 4 மண்டலங்களில் தொற்றை குறைப்பது சவாலாக உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் இறங்குமுகமாக இருந்தால் மட்டுமே கர்நாடகாவை போன்று வார இறுதி நாளில் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்ேபாது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், வேலூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இறங்கு முகமாக உள்ளது.ஆனாலும், கோவை, கன்னியாகுமரி உள்பட 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 2வது அலைக்கும், 3வது அலைக்கும் உள்ள வித்தியாசம் மருத்துவமனையில் படுக்கைகள் ஆக்கிரமிப்பு தான், அந்தவகையில், தமிழகத்தில் தற்போது 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 12 ஆயிரத்து 134 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1.31 லட்சம் படுக்கைகள் இருந்த போதிலும், 9 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. அதைப்போன்று ஆக்சிஜன் படுக்கைகளில் 11 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் 100 பேரில் ஒருவர் இறக்கும் நிலை இருந்தது. தற்போது ஆயிரம் பேரில் ஒருவர் மட்டுமே இறக்கின்றனர். தற்போது 80 சதவீத இறப்புகளில் தடுப்பூசி போடாதவர்கள் 68 சதவீதம் பேரும், ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் 12 சதவீதம் பேரும் இறக்கின்றனர்.அதேபோல், 16 சதவீத இறப்புகள் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கும் நிகழ்கிறது.

மேலும் தினசரி இறப்புகளில் 92 சதவீதம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், பல்வேறு இணை நோய் உள்ளவர்களும் இறக்கின்றனர். 2-வது அலையின் போது 500 டன் என்கிற அளவில் இருந்த ஆக்சிஜன் தேவை, தற்போது 117 டன் அளவு மட்டுமே தேவை என்கிற அளவில் குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தாக்கம் தற்போது இறங்கியுள்ளது. ஆனாலும் சோழிங்கநல்லூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய மண்டலங்களில் தொற்றை குறைப்பது சவாலாக உள்ளது. சென்னையை பொறுத்தவரை தொற்று குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். அதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் இறங்குமுகமாக இருந்தால் மட்டுமே கர்நாடகாவை போன்று வார இறுதி நாளில் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும்.இவ்வாறு செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: