மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? சூடு பிடிக்கிறது உள்ளாட்சி தேர்தல்.! வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நீதிமன்றம் நாளை வழங்கும் உத்தரவை பொறுத்து தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு  விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம்  சுற்றறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ெகாரோனா 3வது அலை உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை (24ம் தேதி) தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த வழக்கானது, தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான  நிலையை எட்ட நேரிடும். 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’’ என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு கடந்த 21ம்தேதி விசாரணைக்கு வந்த போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள், நகர்புற  தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம்  உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து, இந்த வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு (நாளை) ஒத்தி வைத்தது. அன்றைய தினம் இது தொடர்பான அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. எனவே, இந்த வழக்கில் நாளை நீதிமன்ற உத்தரவு என்ன வழங்கப்படும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வழக்கில் தீர்ப்பும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் தேர்தலுக்கு தடை அல்லது கொரோனாவை காரணம் காட்டி தள்ளி வைத்தால், தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பு உருவாகும். இல்லாவிட்டால், நாளைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பதால் தமிழக அமைச்சர்களின் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி உறுதியாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளன. ஏனென்றால் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக விருப்ப மனுக்களை பெற்று அவர்களிடம் நேர்காணல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. எனவே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை பொறுத்து நாளை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் நாளைய நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: