அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்; முதல்வர் அறிவிப்பால் மக்கள் உற்சாகம்

அலங்காநல்லூர்: கொரோனா பரவல் அச்சங்களுக்கு மத்தியிலும் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் பொங்கல் விழா ஜல்லிக்கட்டுகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக நடத்தப்பட்டுள்ளன. தைத் திருநாளாம் ஜன.14ம் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 700 காளைகள் களமிறக்கப்பட்டன. அடுத்த நாள் மாட்டு பொங்கல் நாளில் (ஜன.15) பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 704 காளைகள் களமிறக்கப்பட்டன. பின்னர் கடந்த 17ம் தேதி நடந்த உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில், வரலாற்றில் முதன் முறையாக 1,020 காளைகள் களமிறக்கப்பட்டன.

இந்த 3 ஜல்லிக்கட்டுகளிலும் மாடுபிடி வீரர்கள் 2,280 பேர் காளைகளுடன் மோதியுள்ளனர். கொரோனா பரவல் அச்சம் ஒருபுறம் இருந்த போதிலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து, எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் ஏற்படாமல் மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர் என்று, அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜல்லிக்கட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு சாதனையாக, தமிழக அரசின் வழிகாட்டுதலோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியினால், பாரம்பரியம், பண்பாடு மாறாமல் ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.

அதனடிப்படையிலேயே மதுரை மாவட்டத்தின் 3 இடங்களிலும் உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அலங்காநல்லூர் வரலாற்றில் மட்டுமல்லாது, ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே 1,020 காளைகளை அவிழ்த்து விட்டு, நடந்தது இந்த ஜல்லிக்கட்டு விழாதான். இது மகத்தான சாதனை. வெற்றி பெற்றவர்களை முதலமைச்சரிடம் நேரடியாக அழைத்து செல்வது தொடர்பாகவும் பரிசீலனை செய்யப்படும். வென்ற வீரர்களுக்கு அரசு வேலை கோரிக்கை இருக்கிறது. இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார். இந்நிலையில், ‘அலங்காநல்லூரில் நவீனமயமாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், ‘உலக தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதலை, நம் வீர விளையாட்டை முறைப்படுத்தி பாதுகாப்பது நம் கடமையாகும்.

உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும். தமிழரின் வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில் நிரந்தர அரங்கம், வீரர்கள் மற்றும் காளைகளின் நலம் காக்க மருத்துவமனைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்த திட்டம் அமையும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ெதரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு அலங்காநல்லூர் பகுதி மக்களை மட்டுமின்றி, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: