கொரோனா தொற்று குறைந்தால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா தொற்றின் எண்ணிக்கையை பொறுத்து வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்று முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் கூடுதலாக 3 ஆயிரத்துக்கும் மேல் கூடிவருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 23ம் தேதியான (இன்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126ம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த 2 வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் எடுக்கும் ஊரடங்கு முடிவுகளுக்கு நல்ல வரவேற்பை மக்கள் தருகிறார்கள். கொரோனா தொற்றின் எண்ணிக்கையை பொறுத்து வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்குமா என்று முடிவுகள் எடுக்கப்படும். வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும். இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: