மும்பையில் பரபரப்பு 20 மாடி கட்டிடத்தில் தீ 7 பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்

மும்பை:  மும்பையில் 20 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில்  23 பேர் படுகாயம் அடைந்தனர்.மும்பை தாட்தேவ் கவாலியா டேங்க், நானா  சவுக், காந்தி மருத்துவமனை எதிரே 20 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று   அதிகாலை 7.30 மணியில் 19வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ  மளமளவென 20வது மாடி வரை பரவியது. அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.  ஆனால் 18 முதல் 20வது மாடியில் வசிக்கும் சிலர் வெளியேற முடியாமல்  தீயில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கிய குடியிருப்புவாசிகளை  மீட்கும் பணியும் தீவிரமாக நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் தீயில் சிக்கியும், மூச்சு திணறியும் குடியிருப்புவாசிகள் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 23 பேர் தீக்காயத்துடன்  மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ விபத்தில்  பலியானவர்கள் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.5 லட்சமும், ஒன்றிய அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: