ஐபிஎல் 15வது சீசன் மார்ச் 27ல் தொடங்க திட்டம்: மும்பை, புனேவில் ஆட்டங்கள்

மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் போட்டிகளை மார்ச் 27 முதல்  மும்பை, புனே நகரங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள்,   புதிய 2 அணிகள் உட்பட 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை  எங்கு நடத்துவது  என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மும்பை, புனே நகரங்களில் மட்டும் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மும்பையில் உள்ள வான்கடே, டி.ஒய்.பாட்டீல், சிசிஐ  அரங்கங்கள், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அரங்கம் என 4 அரங்கங்களில்  ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த உள்ளதாகவும், முழுமையான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* வீரர்களுக்கான மெகா ஏலம்  ஏற்கனவே வெளியான  பிப்.12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும்.

* ஏலத்தில்  பங்கேற்க 1,214 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 896 பேர் இந்தியர்கள். 318 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

* 270 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். 903 பேர் சர்வதேச வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள், முதல் தர ஆட்டங்களில் பங்கேற்றவர்கள்.  41 பேர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுபவர்கள்.

* பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெறும் மெகா ஏலத்தில் முந்தைய ஐபிஎல் சீசன்களில் விளையாடிய 143 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

* அடிப்படை  விலையாக ₹20 லட்சம், ₹50 லட்சம், ₹1 கோடி, 1.5கோடி, 2 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.* கடந்த முறை ₹20 லட்சம் அடிப்படை விலையில் இருந்து ₹5.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கானை பஞ்சாப் அணி தக்கவைக்க முயன்றது. அவருக்கு ₹11 கோடி வரை தர முன்வந்தும் அதை ஏற்காமல் ₹20 லட்சம் அடிப்படை விலைக்கே தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Related Stories: