200 முதலீடு செய்தால் 400 தருவதாக மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் வாலிபரிடம் 9.5 லட்சம் மோசடி: ஆசாமி சிக்கினார்

திருவள்ளூர்: 200 முதலீடு செய்தால் 400 தருவதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் 9.5 லட்சம் மோசடி செய்த திருவண்ணாமலை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கோகுல்(25). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஒன்னுபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(33) என்பவருடன் டெலிகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தின் மூலம் சரவணன் தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் 200 முதலீடு செய்தால் 400 தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்ற ஆசையில் கோகுல் முதலில் கடந்த 5ம் தேதி சரவணன் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு முதலில் 200 அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய சிறிது நேரத்தில் மீண்டும் 200க்கு பதிலாக 400 கோகுலின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கோகுல் மேலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 1000 முதல் 10 ஆயிரம் வரை செலுத்த தொடங்கினார்.

அவர் செலுத்திய பணம் இரட்டிப்பாக வரவே ஒரு கட்டத்தில் அவர் 9 லட்சத்து 50 ஆயிரம் வரை செலுத்தினார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சரவணன் இங்கு நெட்வொர்க் கிடைக்கவில்லை. இதனால் பணம் செலுத்த முடியவில்லை. எனவே மேற்கொண்டு பணம் செலுத்தினால் மேற்கொண்டு கூடுதலாக அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். தொடர்ந்து சரவணன் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோகுல் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாசர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஒன்னுபுரம் பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த சரவணனை கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: