5 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்

* சிற்ப தொழிலாளி உட்பட 6 பேர் கைது.

* கார் மற்றும் கத்திகள் பறிமுதல்

மாமல்லபுரம்:  மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (36). இவரது மனைவி நித்யா. திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஆனந்தன், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடந்த, டிசம்பர் 18ம் தேதி, ஆனந்தனின் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மாமல்லபுரம் பேரூராட்சி, வெண்புருஷம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உறவினர் ஒருவருக்கு கல்லறை கட்ட வேண்டும். அதற்கான எம்.சாண்ட், கம்பி, சிமென்ட் வேண்டும். அதனை உடனடியாக எடுத்து வரவேண்டும் என கூறியுள்ளார். அதன்படி ஆனந்தன், தனது சரக்கு வாகனத்தில், அவர்கள் கேட்ட பொருட்களை கொண்டு சென்றார். பின்னர் அவர்களிடம், பணம் கேட்டார். ஆனால் அங்கிருந்த 5 பேர், கையில் பணம் இல்லை. ஏடிஎமில் பணம் எடுத்து தருகிறோம் என கூறி, ஆனந்தனை, ஒரு காரில் அழைத்து கொண்டு, இசிஆர் சாலையில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அப்போது, அவர் என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டு கூச்சலிட்டார். உடனே அவர்கள், கழுத்தில் கத்தியை வைத்து, கொலை செய்வதாக மிரட்டி, ‘‘₹5 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம். உன் மனைவிக்கு போன் செய்து உடனடியாக பணத்தை நாங்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டு வர சொல்’’ என கூறியுள்ளனர்.

இதையறிந்ததும் மனைவி நித்யா அதிர்ச்சியடைந்தார்.இந்தவேளையில், ஆனந்தனின் கடைக்கு அருகில், சிற்ப தொழிலாளியாக வேலை செய்யும், வடக்கு மாமல்லபுரம், அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த சரவணன் (எ) கராத்தே சரவணன் (40), தானாக முன்வந்து, உங்கள் கணவரை கடத்திவிட்டார்களா, என கேட்டுள்ளார். மேலும், அவர் உதவி செய்வதாக ஆறுதல் கூறியுள்ளார். இதையடுத்து, நித்யா, சரவணனுடன், தனது கணவரை மீட்க கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்று பாலம் அருகே சென்று, மர்மநபர்கள் கேட்ட ₹5 லட்சத்தில் முதல் கட்டமாக ₹2 லட்சம் கொடுத்தார். அதை வாங்கி கொண்ட அவர்கள், பணம் போதாது என கூறி நித்யா கழுத்தில் இருந்த 1 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, ஆனந்தனை விடுவித்து காரில் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து ஆனந்தன், மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். அவர்களுடன் சென்ற சரவணன், தனது பெயரை சாட்சியாக போட வேண்டாம். இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அப்போது, ஆனந்தனை மீட்க உதவி செய்த சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, ஆனந்தனை கடத்த திட்டம் தீட்டி, அவரது மனைவி நித்யாவிடம் உதவி செய்வது போல்  நாடகமாடியது தெரிவந்தது. இதையடுத்து போலீசார், சரவணன் கொடுத்த தகவலின்படி, மாமல்லபுரம் அருகே பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த அவரது கூட்டாளிகள் மணிமங்கலம் மூர்த்தி (40), ஆலிகுப்பம் விஜயகுமார் (39), செம்மஞ்சேரி அர்ஜூன் (35), சென்னை மயிலாப்பூர் ரஞ்சித்குமார்(38), மகேந்திரன்(40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தொழிலதிபரை கடத்தி ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலை, துரிதமாக செயல்பட்டு கைது செய்த இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐக்கள் ராஜா, விஜயகுமார், தனிப்படை காவலர்கள் பார்த்திபன், சுரேஷ், விஜய், பார்த்திபன், பிரபாகரன், கலைச்செல்வன், சீனிவாசன் ஆகியோரை மாமல்லபுரம் டிஎஸ்பி. ஜகதீஷ்வரன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories: