காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்தபோது சாலை நடுவே லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து கடும் பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்று காலை, காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. பரபரப்பு நிலவியது.சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள காஸ் உற்பத்தி ஆலையில் இருந்து,  சிலிண்டர்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி  நேற்று காலை செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டது.

லாரியை மதுராந்தகத்தை சேர்ந்த புருஷோத்தமன் (37) என்பவர் ஓட்டினார். செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையின் நடுவே இருந்த மின்கம்பம் மற்றும் சென்டர் மீடியனில் மோதி,  ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அதில் இருந்த 50க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின. இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

தகவலறிந்து, மறைமலைநகர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலையில் உருண்டோடிய காஸ் சிலிண்டர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். பின்னர், ரெக்கவரி வாகனம் வரவழைக்கப்பட்டு, சென்டர் மீடியனில் சாய்ந்த லாரியை சீர் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது.

Related Stories: