பிரபல ரவுடி ஆக்கிரமிப்பு செய்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் அதிரடி

ஸ்ரீபெரும்புதூர்: பிரபல ரவுடி படப்பை குணா, ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குணா (எ) குணசேகரன் (43). பிரபல ரவுடி. மீது சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல காவல் நிலையங்களில் நிலம் அபகரிப்பு, கொலை, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஏடிஎஸ்பியாக வெள்ளைதுரை நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவின்பேரில், ரவுடிகளின் பட்டியல் தயார் செய்து,  தனிப்படை அமைத்து ரவுடிகளை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். இதையொட்டி, பிரபல ரவுடி படப்பை குணா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார்.

இந்நிலையில்,  படப்பை குணாவின் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை, அவர் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறையினர், நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் ₹5 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் அரசு நிலத்தை, படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததும், அந்த நிலத்துக்கு போதிய ஆவணங்கள் இல்லாததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். மேலும், இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகை வைத்தனர்.

Related Stories: