விபத்தில் சிக்கி ஊனச்சான்று பெற வருவோருக்கு 11வது வார்டில் 4 படுக்கை ஒதுக்கீடு: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சி.ஜெகதீசன், விபத்தில் சிக்கியதால் இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதற்காக ஊனச் சான்று பெற சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 40% நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றளிக்கப்பட்டது.இதையடுத்து, ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரியும் 2018ம் ஆண்டு ஜெகதீசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஊனச்சான்று பெற வருவோருக்காக தனி வார்டை அமைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜரானார். அப்போது, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் ஆர்.கோவிந்தசாமி ஆஜராகி,  ஊனச்சான்று கோரி மருத்துவமனைக்கு வருபவர்களுக்காக 11வது வார்டு பிரிக்கப்பட்டு அதில் 4 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை  ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றையும் ஒதுக்க வேண்டுமென அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: