மக்கள் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் சாலை பணிகள் மேற்கொள்ளும்போது இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை: 5 துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு 5 துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100  அடி சாலை, ஜிஎஸ்டி சாலை, எண்ணூர் மெயின் ரோடு, காமராஜர் சாலை உட்பட 258 கி.மீ நீள சாலைகள் உள்ளன.  

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், சென்னை மாநகரின் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை செயல்படுத்தும்போது உள்ள இடர்பாடுகளை களைவதற்காக  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், தெற்கு ரயில்வே, மின்வாரியம் மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், மின் பெட்டி, கம்பங்கள், மின்மாற்றி ஆகியவற்றை மாற்றும் பணிகளை  வேகமாக மேற்கொள்ள வேண்டும்.

5 நாள், 6 நாட்கள் என மின் தடை செய்து பொதுமக்களுக்கு தொந்தரவு கூடாது. அதே போன்று குடிநீர் பைப்லைனை மாற்றும் போது, அந்த பகுதிகளில் தேவைப்படும் மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: