பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் 7 கோடி பேர் பயணித்ததில் 138 கோடி வருவாய்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் 7 கோடி பேர் பயணம் செய்ததில் அரசுக்கு 138 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை:பொங்கலுக்கு முன்பு கடந்த 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,232 தினசரி பேருந்துகளுடன், 1,514 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 கோடியே 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ₹65 கோடியே 58 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட சராசரியாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக 1,231 தினசரி பேருந்துகளும், 201 சிறப்புப் பேருந்துகளும்இயக்கப்பட்டு, 96 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம், ₹3 கோடியே 50 லட்சம் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

பொங்கலுக்கு பின்பு, கடந்த 15, 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,164 தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ₹72 கோடியே 49 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு, 7 கோடி பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக சுமார் ₹138 கோடியே 7 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: