கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு

* சென்னையில் பாதுகாப்பில் 10,000 போலீசார் * மீன், காய்கறி வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு என்பதால் நேற்று மீன், காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் கூடுதலாக 3 ஆயிரத்துக்கும் மேல் கூடிவருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 23ம் தேதியான (இன்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்று காலையில் பொருட்கள் வாங்க மாநிலம் முழுவதும் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு, தனியார் அலுவலகம் விடுமுறை என்பதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நேரத்தில் பொதுமக்கள் காய்கறி, மீன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வாங்கி சமைத்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் காய்கறி, மீன், மட்டன்களை முன்தினமே வாங்கி வைத்து கொள்ள மக்கள், நேற்று காலை முதல் காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க படையெடுத்தனர். அவர்களிடம் கொரோனா பயம் இல்லாத காரணத்தால், சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர். அதேபோல மட்டன் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது. மேலும் காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க அதிக அளவில் போட்டி போட்டு வாங்கினர். இன்று ஒரு நாள் மட்டும் தான் முழு ஊரடங்கு. நாளை வழக்கம் போல் கடைகள் அனைத்தும் இயங்கும். அப்படியிருக்கும் போது ஒரே நாளில் இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் என்ன. ஒரு நாள் பொருட்கள் வாங்கமல் இருந்தால் குடியா மூழ்கி போய் விடும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி கூட்டம் கூடினால் எத்தனை லாக்டவுன் போட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சிரமம் தான் சமூக ஆர்வலர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்தனர்.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்று நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடங்கியுள்ளது. இந்த ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணி வரை தொடர்ச்சியாக 31 மணி நேரம் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைகளில்  சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த பணிகளில் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சென்னை  முழுவதும் மொத்தம் 457 ேசாதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் சுழற்றி முறையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு செல்பவர்களுக்கு அனுமதி

முழு ஊரடங்கின் போது திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. எனவே, 23ம் தேதி ஞாயிறு அன்று அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்படுகிறது. அனைத்து மண்டல மேலாளர்கள் தங்களது மாவட்டங்களில் கடைகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என கூறியுள்ளது.

Related Stories: