தொழில்நுட்ப அனுமதி அதிகார வரம்பு உயர்வு காரணமாக நெடுஞ்சாலை துறையில் சிறிய பணி செய்ய காத்திருக்க வேண்டாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் கோட்ட பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர்களுக்கு நிதியை செலவு செய்ய தொழில்நுட்ப அனுமதிக்கான அதிகார வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் 62 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த நிலையில் பெருகி வரும் போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துவது, புதிதாக பாலங்கள் கட்டுவது, புறவழிச்சாலைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொழில்நுட்ப அனுமதி வழங்க கோட்ட பொறியாளருக்கு ₹50 லட்சம், கண்காணிப்பு பொறியாளர் ₹2 கோடி,  கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு பிரிவு தலைமை பொறியாளர் ₹2 கோடி என,  தலைமை பொறியாளர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனவே, இந்த நிதிகளுக்கு உட்பட்ட பணிகளுக்கு அந்தெந்த அதிகாரிகளிடம் தொழில் நுட்ப அனுமதி பெற வேண்டும்.

மேலும், இந்த நிதியை அவர்களின் அதிகாரத்தின் கீழ் எடுத்து பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிதி மிகவும் குறைவு என்பதால் கீழ்அதிகாரிகள் மேல் அதிகாரிகளையும், மேல் அதிகாரிகள் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால், சிறிய பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டன. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் கோட்ட, கண்காணிப்பு, தலைமை பொறியாளர்களுக்கு நிதியை செலவு செய்ய தொழில் நுட்ப அனுமதிக்கான அதிகார வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர்  தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:நெடுஞ்சாலைத்துறையில் கோட்ட பொறியாளர் ₹50 லட்சம் வரையும், கண்காணிப்பு பொறியாளர் ₹2 கோடி வரையும், தலைமை பொறியாளருக்கு முழு அதிகாரம், வடிவமைப்பு பிரிவு தலைமை பொறியாளர் ₹2 கோடி வரையும் தொழில் நுட்ப அதிகாரம் வழங்க அனுமதி  இருந்தது. இந்த நிலையில் முதன்மை இயக்குனர் தொழில்நுட்ப அதிகாரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு அதிகார வரம்பை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. அதன்படி கோட்ட பொறியாளர் ₹50 லட்சம் வரையும், கண்காணிப்பு பொறியாளர் ₹2 கோடியில் இருந்து ₹7 கோடி வரையும், தலைமை பொறியாளர் (வடிவமைப்பு பிரிவு) ₹2 கோடியில் இருந்து ₹7 கோடி வரையும் உயர்த்தி ஆணையிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: