கோவையில் 5 நாள் போராட்டத்துக்கு வெற்றி கூண்டுக்குள் சிக்கியது சிறுத்தை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு: மேலும் ஒரு பெண் சிறுத்தை சுற்றுவதால் பீதி

கோவை: கோவையில் வலம் வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. அது டாப்சிலிப் பகுதியில் அடர்ந்த வனத்தில் விடுவிக்கப்பட்டது. கோவை, மதுக்கரை, கோவைப்புதூர் வட்டாரத்தில் சிறுத்தை ஒன்று வலம் வந்தது. பொதுமக்கள் வீடுகள் மற்றும் ரோட்டில் சிறுத்தை சுற்றியதால் மக்கள் பீதியடைந்தனர். நாய், கோழி, ஆடுகளை இந்த சிறுத்தை வேட்டையாடி வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை பாலக்காடு மெயின் ரோடு பி.கே.புதூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் குடோனில் இந்த சிறுத்தை பதுங்கி இருந்தது. கடந்த 5 நாட்களாக இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர்.

குடோன் கதவு பகுதியில் கூண்டு வைத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கூண்டிற்குள் சிறுத்தை சிக்கிக்கொண்டது. வனத்துறை மருத்துவர் நடத்திய சோதனையில் பிடிபட்டது 3 வயது ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. சிறுத்தை மாட்டிறைச்சி, ரொட்டி மற்றும் தண்ணீர் குடித்ததால் சற்று தெம்பாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கே அடர்ந்த வனத்தில் கூண்டை திறந்து விட்டதும், சிறுத்தை பாய்ந்து வனத்திற்குள் சென்று மறைந்தது.

Related Stories: