தியாகி மனைவிக்கு நிலுவையுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தியாகி தஞ்சாவூர் அண்ணாநகரைச் சேர்ந்த சொர்ணம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் முத்தையா. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பர்மா நாட்டின் ரங்கூன் நகரில் சிப்பாயாக பணியாற்றினார். 1945 மே முதல் 1946 ஆகஸ்ட் வரையில் பெகு மற்றும் ரங்கூன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்காக தமிழக அரசு கடந்த 16.2.1981 முதல் தியாகிகளுக்கான பென்ஷன் வழங்கியது. 1991ல் என் கணவர் இறந்த பிறகு  ஒன்றிய அரசின் தியாகிகளுக்கான குடும்ப பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை ஒன்றிய அரசு  நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு தியாகிகளின் குடும்பத்தினருக்கான பென்ஷன் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: சிறையில் உடன் இருந்தவர் வழங்கிய சான்றிதழில், சிறையில் இருந்த காலம் மாறுபடுகிறது எனக் கூறி ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. மனுதாரரின் கணவருடன் சிறையில் இருந்தவர், தான் சிறையில் இருந்த காலத்திற்கு மட்டும் சான்றளித்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. நாட்டின் விடுதலைக்கான இலக்கில் பல தியாகிகள் தங்களின் பங்களிப்ைப அளித்துள்ளனர். இந்த நாட்டில் கணவரை இழந்த பெண்கள் போராளிகளாக இருந்துள்ளனர்.

வீரம் செறிந்த அப்பெண்களின் போராட்டத்தால் தான் ஒரு ராஜ சகாப்தமே முடிவுக்கு வந்தது. ஆனால், நவீன ஆதிக்கவாதிகளாக உள்ள அதிகாரிகளின் கையில் இதைப்போன்றவை சிக்கியுள்ளன. மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று தற்போதைய காலம் வரையில் நிலுவைத்தொகையையும் சேர்த்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மனுதாரரின் ஆயுள் காலம் வரை அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையையும் 12 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: