பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட தஞ்சை மாணவியின் உடலை பெற்று இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்: பெற்றோர் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய உத்தரவு

மதுரை: பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட தஞ்சை மாணவியின் உடலைப் பெற்று முறைப்படி இறுதி சடங்கு செய்யவும், பெற்றோரின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் அருகே மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று முன்தினம் முறையிடப்பட்டது. இதை ஏற்று நீதிபதி, அன்று மாலையே விசாரித்தார். பின்னர், மாணவியின் பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். எவ்வித குற்றச்சாட்டும் எழாத வகையில் போலீசார் விசாரிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை ஜன.24க்கு ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘பிரேத பரிசோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது. குரூப் 1 அந்தஸ்து நிலையிலுள்ள டிஎஸ்பி நேர்மையாக வழக்கை விசாரிக்கிறார்’’ என்றார்.அப்போது நீதிபதி, ‘‘மாணவிக்கு ஏதேனும் பாலியல்ரீதியாக துன்புறுத்தல் இருக்குமா? இதற்காக மறுபிரேத பரிசோதனை எதுவும் கோருகிறீர்களா’’ என்றார். மனுதாரர் வக்கீல், ‘‘அதுபோல எந்த குற்றச்சாட்டும் இல்லை. மறுபிரேத பரிசோதனை செய்ய கோர விரும்பவில்லை’’ என்றார். அப்போது நீதிபதி, ‘‘மாணவியின் பெற்றோர் வீடியோ காலில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் எதுவும் கூற விரும்புகிறார்களா?’’ என்றார். அப்போது இருவரும் அழுதபடி இருந்தனர்.  இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முதுகலை ஆராய்ச்சி மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். வேறுவிதமான சந்தேகம் எதுவும் தங்களுக்கு இல்லையென மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டு, இறுதி சடங்குகளை மேற்ெகாள்ள வேண்டும். உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இறுதி சடங்கு செய்வதில் போலீசார் எந்தவித நெருக்கடியும் கொடுக்கக் கூடாது. மாணவியின் தாய், தந்தை இருவரும் நாளை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி தங்களின் கோரிக்கை குறித்த வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஒரு மாஜிஸ்திரேட்டை மாவட்ட நீதிபதி நியமனம் செய்ய வேண்டும். இந்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மாணவி, ஏன் தற்கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை இருக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு  தள்ளி வைத்தார்.

Related Stories: