கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதத்துக்கு பிறகே தடுப்பூசி போடணும்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நடந்து வருகிறது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது போடப்படுகிறது. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடர்பான  புதிய வழிகாட்டு நெறிமுறையை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் செல் அனுப்பியுள்ளார். அதில், ‘ஜனவரி 10ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வரும் ‘கூடுதல் டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நபர்கள், 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட நாளில் இருந்து 39 வாரங்கள் முடிந்த பிறகே அதை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால்,  அதில் இருந்து குணமான பிறகு 3 மாதங்களுக்கு பிறகே அந்த நபர் முதல் அல்லது 2வது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், உள்ளூர் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

3.37 லட்சம் பேருக்கு தொற்று நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் புதிதாக பாதித்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது. இதில், ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 50 பேரும் அடங்குவர்.

* புதிதாக 488 பேர் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.

தேவகவுடாவுக்கு 2வது முறையாக கொரோனாமுன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவகவுடாவுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டும் தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: