குடியரசு தின அணிவகுப்பில் 25 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு: ராணுவம் அறிக்கை

புதுடெல்லி: டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் 25 அலங்கார ஊர்திகள், 16 அணிவகுப்பு குழுக்கள் மற்றும் 17 ராணுவ இசைக்குழுக்கள் பங்கேற்க உள்ளதாக இந்திய ராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வரும் 26ம் தேதி நாட்டின் குடியரசு தினத்தையொட்டி, டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசின் தேர்வுக்குழு நிராகரித்தது சர்ச்சையானது.

இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* குடியரசு தின விழா அணிவகுப்பு வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும்.

* விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.

* விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை அணிவகுப்பு சென்றடையும்.

* இதில், பல்வேறு மாநிலங்கள், துறைகள், ஆயுத படைகளின் 25 அலங்கார ஊர்திகள் பங்கேற்கும்.

* ராணுவ பலத்தை காட்டும் வகையில் பிடி-76 டாங்கி, செஞ்சூரியன் டாங்கி, 2 எம்பிடி அர்ஜூன் எம்கே-1 டாங்கிகள், பிஎம்பி-1 மற்றும் பிஎம்பி-2 பீரங்கிகள் அணிவகுப்பில் இடம் பெறும். மேலும் 75/24 பேக் பீரங்கி, 2 தனுஷ் பீரங்கிகள், 2 ஆகாஷ் ஏவுகணைகள் இடம் பெறும்.

* ராஜ்புத் படைப்பிரிவு, அசாம் படைப்பிரிவு, ஜம்மு காஷ்மீர் காலாட்படை, சீக்கிய காலாட்படை, பாராசூட் பிரிவு உட்பட 6 அணிகள் ராணுவத்தின் அணிவகுப்பு படைகளாக இருக்கும். இதுதவிர, விமானப்படை, கடற்படையின் தலா குழுவும் பங்கேற்கும்.

* மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசம் அணிவகுப்பில் இடம் பெறும்.

* ஆயுதப் படைகள், மத்திய துணை ராணுவப் படைகள், டெல்லி போலீஸ், என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றிலிருந்து 16 அணிவகுப்பு குழுக்களும், 17 ராணுவ இசைக்குழுக்களும் அணிவகுப்பில் இடம் பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொண்டாட்டம் இன்று துவக்கம்

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 24ம் தேதி தொடங்கப்படுவது வழக்கம். இதில் மாற்றம் செய்த ஒன்றிய அரசு, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாளில் அவரை கவுரவிக்கும் வகையில் ஜனவரி 23ம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இனி தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, நேதாஜியின் பிறந்தநாளான இன்று முதல் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

Related Stories: