அரசின் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு 10 பணிகளை 3 மாதங்களில் முடியுங்கள்: மாவட்ட கலெக்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘மாவட்டங்கள் தோறும் 10 முக்கிய பணிகளை அடையாளம் கண்டு, அவற்றை 3 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும்,’ என கலெக்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.நாடு முழுவதும் மிகவும் வளர்ச்சி அடையாத 112 மாவட்டங்களை தேர்வு செய்து, அவற்றை மேம்படுத்த ‘ஆர்வமுள்ள மாவட்டங்கள்’ திட்டத்தை பிரதமர் மோடி 2018ல் தொடங்கி வைத்தார். இந்நிலையில், மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய நிலை குறித்து கலெக்டர்களுடன் நேற்று அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படுவது, ஆர்வமுள்ள மாவட்டங்களில் நல்ல முடிவுகளைத் தருகிறது.

உங்கள் அனைவரின் முயற்சியால், ஆர்வமுள்ள மாவட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகளை நீக்கி வருகின்றன. அதோடு, நாட்டின் வளர்ச்சியையும் அவை முடுக்கி விட்டுள்ளன. ஆர்வமுள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்கு, அரசு நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே நேரடியான, உணர்வுப்பூர்வமான இணைப்பு இருப்பதே முக்கிய காரணமாகும். இந்த இணைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்.பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த தேவையான அரசின் திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட காலவரையறை செய்ய வேண்டும்.

அந்த இலக்குகளை எட்ட முயற்சிக்க வேண்டும். அரசின் சேவைகள், வசதிகளை 100 சதவீதம் நிறைவு செய்வதே நாட்டின் இன்றைய இலக்காகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 வருட தொலைநோக்குப் பார்வை வேண்டும். அடுத்த 3 மாதத்தில் நிறைவேற்ற  வேண்டிய 10 பணிகளை அடையாளம் கண்டு அவற்றை நிறைவேற்றி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில், கலெக்டர்கள் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

தடைகளை அகற்றினால் ஒன்று பதினொன்றாகும்

மோடி மேலும் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாவட்டமும் மற்றவர்களின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் சவால்களை மதிப்பிட வேண்டும். தடைகளை அகற்றுவதன் மூலம் ஒன்று பதினொன்றாக மாறும் என்பதை ஆர்வமுள்ள மாவட்டங்கள் நிரூபித்துள்ளன,’’ என்றார்.

Related Stories: