சாப்பாட்டுக்கு கூட திண்டாட்டம் திவாலாகும் இலங்கை கைகொடுக்கும் இந்தியா: வேடிக்கை பார்க்கிறது சீனா

கொரோனா பாதிப்பை தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. நாட்டின் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமான சுற்றுலா துறை வீழ்ச்சி கண்டுள்ளதால் இலங்கை அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் சீனாவிடம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கழுத்தை நெரிக்க, வரலாறு காணாத பணவீக்கத்தால் தவிக்கிறது. உணவுப் பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் கரைந்து போனதால், வெளிநாட்டில் இருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக் கூட முடியாமல் தவிக்கிறது.இதனால், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், வருவாய் இழப்பு, பசி, பட்டினி அதிகரித்து இலங்கை மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான எரிபொருளை வாங்க முடியாமலும் இலங்கை திணறுகிறது. கச்சா எண்ணெய்க்கு டாலர் செலுத்த முடியாமல் நாட்டில் செயல்பட்டு வந்த ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் இல்லாமல் மின் உற்பத்தி சரிந்து, முக்கியமான நேரங்களில்  அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்த மின் தடையால் உள்நாட்டின் உற்பத்தி வெகுவாக சரியத் தொடங்கி உள்ளது.

அந்நிய செலாவணிக்காக, சமீபத்தில் கஜானாவில் இருந்த தங்கத்தையும் தாரை வார்த்து கரைத்து விட்டது இலங்கை அரசு. ஈரானிடம் கச்சா எண்ணெயை கூட பண்டமாற்று முறையில் வாங்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட இலங்கை திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட நிலையில், இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா. சமீபத்தில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 100 கோடி டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடியை கடனாக வழங்கியது. இதை வைத்து இலங்கை, உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்துள்ளது. அத்துடன், இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரூ.3,750 கோடி கடனையும் தர உள்ளது. இது தர்மசங்கடமான நேரத்தில் இலங்கைக்கு கிடைத்திருக்கும் மகத்தான உதவியாக கருதப்படுகிறது.

சமீப ஆண்டாக சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை இலங்கை உதாசீனப்படுத்தினாலும், இக்கட்டான நிலையில் இருந்து அந்நாட்டை மீட்க இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. அதே சமயம், இந்தியப் பெருங்கடலை குறிவைத்து, இலங்கைக்கு கடன் கொடுத்து நட்பு பாராட்டிய சீனா, இதுவரையிலும் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு தர வேண்டிய பணத்தை வசூலிக்கவும் சமீபத்தில் கறார் காட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்திருந்த போது, கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கை சில சலுகைகளை கோரியது. அதற்கும் சீனா இதுவரை பதில் சொல்லாமல் உள்ளது. இலங்கையை கடனில் இருந்து மீட்கவும் எந்த உதவியும் செய்யாமல் சீனா உள்ளது. பாகிஸ்தானை போல் இலங்கையையும் அடிமையாக்க, சீனா போடும் திட்டமாகவே இது கருதப்படுகிறது.

‘கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ - என்ற பாடல் வரிகளைப் போல, உண்மையிலேயே கடனால் கலங்கி நிற்கிறது நமது அண்டை நாடான இலங்கை.

மாஸ்டர் பிளான்

சீனா பக்கம் சாயும் இலங்கையை மீண்டும் நம் வழிக்கு கொண்டு வரும் ராஜதந்திர மாஸ்டர் பிளானுடனே இந்தியா உதவிக்கரம் நீட்டியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘ஏற்கனவே, ஈழத்தமிழர்கள், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் என பல விஷயங்களில் இலங்கை அரசு நமக்கு பல்வேறு துரோகங்களை செய்துள்ளது. எனவே, இலங்கை அரசு ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற, இதை ஒரு வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த உத்தரவாதம் பெற வேண்டும்,’ என்ற கோரிக்கைகள் இந்தியாவில் வலுத்துள்ளன.

* இலங்கையில் 8 ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து 2வது மாதமாக இரட்டை இலக்கத்தை தாண்டி உள்ளது.

* கடந்த நவம்பரில் முதல் முறையாக இலங்கையின் பணவீக்க விகிதம் 11.1 சதவீதமாக அதிகரித்த நிலையில் டிசம்பர் மாதம் இது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* டிசம்பரில் மட்டும் உணவுப் பொருட்கள் விலை 6.3 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

* இதுவே, கடந்த 12 மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 21.5 சதவீதமும் உணவு அல்லாத பொருட்களின் விலை 7.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Related Stories: