×

நேற்று குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: பவுனுக்கு ரூ.128 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று காலையில் பவுனுக்கு ரூ.128 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஒரு நிலையாக இல்லாமல் இருந்து வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி ஒரு பவுன் ரூ.36,296க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,320க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி பவுன் ரூ.56 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,376க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி பவுனுக்கு ரூ.328 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. நேற்று காலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,594க்கும், பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,752க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை பவுன் ரூ.37 ஆயிரத்தை நெருங்கி வந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் திடீரென குறைந்தது.

அதாவது கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,572க்கும், பவுனுக்கு ரூ.128 குறைந்து ஒரு பவுன் ரூ.36,576க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இன்று காலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று காலையில் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4588க்கும், பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு பவுன் ரூ.36,704க்கும் விற்கப்பட்டது. வழக்கமாக சனிக்கிழமையன்று காலையில் என்ன விலையில் தங்கம் விற்கிறதோ, மாலையிலும் அதே விலையில் தான் தங்கம் விற்பனையாவது வழக்கமாக உள்ளது. அதனால், இன்று மாலையில் காலை நிலவரப்படியே தங்கம் விற்பனையாக வாய்ப்பு உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையிலேயே நாளை தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Tags : Low, gold prices, increase
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...