திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை கலைஞர்கள் அஞ்சலி

தஞ்சை: திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 175வது ஆராதனை விழாவையொட்டி இன்று காலை நடந்த பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 175வது ஆராதனை விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் விழா நடந்தது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை  நடந்தது. இதையொட்டி தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த வீட்டிலிருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலை அடைந்தனர். அங்கு தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் காலை 8.30 மணிக்கு விழா பந்தலில் மங்கள இசை நடந்தது. 9 மணி முதல் 10 மணி வரை தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், பிரபஞ்சம் பாலசந்திரன், முஷ்ணம் ராஜாராவ் என சுமார் 50 கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். வழக்கமாக 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் இதில் கலந்து கொள்வார்கள். கொரோனாவால் குறைவான கலைஞர்களே வந்திருந்தனர். அதேபோல் பார்வையாளர்களும் இன்று அனுமதிக்கப்படவில்லை. இதன்பின் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: