சிறுவர்களை ‘கள்’ குடிக்க வைத்து ஆர்ப்பாட்டம்-கலவை அருகே பரபரப்பு

கலவை :  கலவை அருகே கள் இறக்கும் தொழிலை அமல்படுத்தக்கோரி, சிறுவர்களை கள் குடிக்க வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கள் இறக்கும் தொழிலை தமிழக அரசு அனுமதிப்பதோடு பனை கள்ளை உணவு பொருளாக அறிவித்து, அதனை சந்தைப்படுத்த வேண்டும் என கள் இயக்க தலைவர் நல்லசாமி தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள கன்னிகாபுரம் கூட்ரோடு பகுதியில் நேற்று சொரையூர், பொண்ணமங்கலம், சேராப்பட்டு, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ரா.கதிரவன், தலைமையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  கோஷங்களை எழுப்பி உடனடியாக கள் இறக்கும் தொழிலை சந்தைப்படுத்த வேண்டும் எனவும், அதனை உணவுப் பொருளாக அறிவிக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கள் இறக்கும் தொழிலாளி தனது வட கயிறுடன் தலைகீழாக நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கள் உணவு பொருள் என்பதை எடுத்துக் கூறும் வகையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு கள் குடிக்க கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், கள்ளிறக்கும் தொழிலாளர்கள், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். வாழப்பந்தல் காவல் சப்- இன்ஸ்பெக்டர்  சரவணன், தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உடன் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ரகுராமன் உட்பட பலர் இருந்தனர்.

Related Stories: