ரெட்டியார்சத்திரம் பகுதியில் பருத்தி செடியை தாக்கும் பச்சை பூச்சி-செவட்டை நோயால் விவசாயிகள் கலக்கம்

சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் பருத்தி விளைச்சல் இல்லாததாலும், இலைகளை தாக்கக்கூடிய செவட்டை நோய் மற்றும் பச்சை பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், கோனூர், நவாபட்டி, கரிசல்பட்டி, கசவனம்பட்டி, இராமநாதபுரம், ஆலத்தூரான்பட்டி மற்றும் தருமத்துப்பட்டி பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பருத்திகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது பூ வைத்து வரும் நேரத்தில் இலைகளில் பழுப்பு நிறம் கலந்த செம்பட்டை நிறத்தில் செவட்டை நோய் தாக்கியதாலும், பூக்களில் பச்சை பூச்சி மற்றும் அஸ்வினி பூச்சி (மாவு பூச்சி) தாக்கியதால் பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன.

இதனால் பருத்தி செடிகளில் காய் வைக்காமல் காய்ந்து விடுவதால் சுமார் 200 ஏக்கரில் பருத்தி பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘பருத்தி செடிகளில் நோய்கள் தாக்கியதால் பூக்கள் உதிர்ந்து வருகின்றன. மேலும் பருத்தி செடிகளில் காய்கள் வைக்காததால் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடையும் நிலையில் உள்ளனர். வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரிட்டுள்ள பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கடும் பணி மற்றும் வெயிலிலிருந்து பருத்தி செடியை காப்பாற்றவும், நோய்களிலிருந்து காப்பாற்றவும் சரியான பூச்சிக்கொல்லி மருந்தை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: