ரோட்டில் வீசப்படும் தபால் பைகள் சின்னாளபட்டியில் சரியான இடத்தில் தபால்நிலையம் அமைக்கப்படுமா?

*மக்கள் எதிர்பார்ப்பு

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் குறுகலான இடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருவதால், தபால் பைகள் ரோட்டில் வீசப்படும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, பொதுமக்களுக்கு தெரியும் வகையில் சின்னாளபட்டியில் தபால்நிலையம்  செயல்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சின்னாளபட்டி பி.ஆர்.மடத்து தெருவில் உள்ள முன்னாள் தபால் நிலைய அலுவலர் வீட்டில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லிலிருந்து தனியார் பஸ்கள் மூலம் தபால் பைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நேற்று காலையில் காமராஜர் சாலையில் காலை 8.10 மணியளவில் தபால் பைகள் ரோட்டில் வீசப்பட்டது. சுமார் முக்கால் மணி நேரம் பைகள் ரோட்டிலே கிடந்தன. அவ்வழியே செல்லும் வாகனங்கள் பைகளை உரசியவாறு சென்றன. இதை பார்த்த பேரூராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் தபால் பைகளை அருகில் உள்ள பெட்டிக்கடையில் எடுத்து வைத்தார். அதன்பின்பு தபால்நிலைய ஊழியர் சைக்கிளை கொண்டு வந்து தபால் பைகளை எடுத்துச் சென்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  இப்பகுதியில் குறுகலான இடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தபால்  நிலைய ஊழியருக்கு சொந்தமான கட்டிடம் என்பதால், இதுவரை இந்த  தபால் நிலையத்திற்கு வரும் அதிகாரிகள் சாலைகளில் உள்ள கட்டிடங்களில்  தபால் நிலையத்தை மாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.முக்கியமான காசோலைகள், தபால்கள், பள்ளிச்சான்றிதழ்கள், அரசு கோப்புகள்  அனைத்தும் தபால்துறை மூலம் தான் வருகின்றன. அந்த பைகள் ரோட்டில்  வீசப்படுவது சரியான செயல் அல்ல.   இனிமேலாவது பொதுமக்களுக்கு தெரியும் வகையில் சின்னாளபட்டி தபால்நிலையம்  செயல்பட வேண்டும், என்றனர்.

Related Stories: