பஸ்களில் முக கவசமின்றி பயணித்தால் கடும் நடவடிக்கை-வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

தஞ்சை : தஞ்சையில் பஸ்களில் முககவசமின்றி பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் பயணிகளையும் முகக் கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் தஞ்சை சரக துணை போக்குவரத்து ஆணையர் கருப்புசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுடன் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கினர். மேலும் முகக் கவசம் அணியாமல் வருவதால் ஏற்படும் நோய் தொற்று மற்றும் அருகில் உள்ளோருக்கும் நோய் தொற்று பரப்பும் நிலை குறித்து விளக்கியதுடன் இனி முகக் கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஓட்டுனர்கள், நடத்துனர்களிடம், பயணிகளை கண்காணித்து முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அறிவுறுத்தினார்.

Related Stories: