ஓ.எம்.ஆர். சாலையில் ஐ.டி. ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை: ஸ்விகி ஊழியர் கைது

சென்னை: தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் ஆணையர் ரவியின் உத்தரவு பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவல்துறையினர் பழைய மகாபலிபுரம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ஸ்விகி ஊழியர் போல டி-சர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் உள்ள உணவு பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை அங்கு நின்றிருந்த சில நபர்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தான். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவனை பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி என்பதும், ஸ்விகி உணவுப் பையில் கஞ்சாவை மறைத்து வைத்து ஐ.டி.ஊழியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் அவன் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரகாஷ்குமார் சேனாபதியை கைது செய்த தனிப்படை போலீசார் ஸ்விகி உணவுப் பையில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள கஞ்சாவையும், அவன் ஓடிவந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காவிட்டாலும் குறித்த நேரத்தில் உணவை டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வரும் எண்ணற்ற ஸ்விகி ஊழியர்கள் மத்தியில் பிரகாஷ் போன்ற நபர்கள் ஒரு கரும்புள்ளி என்பதே கசப்பான உண்மை.            

Related Stories: