பனி தாக்குதல் எதிரொலி தேயிலை செடிகள் மீது வைக்கோல்களை பரப்பி பாதுகாக்கும் விவசாயிகள்

மஞ்சூர் : தேயிலை செடிகளின் மீது வைக்கோல் மற்றும் தாகை செடிகள் பரப்பி வைத்து பனியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் மட்டுமே உள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்தாண்டு பெய்த தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளால் தேயிலை மகசூல் அதிகரித்தது.

தேயிலைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை காரணமாக பசுந்தேயிலை வரத்து பல மடங்கு உயர்ந்தது. இதனால் குந்தா பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா மற்றும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையின் தாக்கம் அடியோடு குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் துவங்கி 3 மாதங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக குந்தாபாலம், தாய்சோலை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு மற்றும் மலைச்சரிவுகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் உறைபனி கொட்டுகிறது. உறைபனியின் தாக்குதலால் குந்தா பகுதியை சுற்றிலும் பல நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளது. இதனால் பசுந்தேயிலை வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

குந்தா பகுதியில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகளில் தேயிலை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதன்காரணமாக தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தனியார் தேயிலை எஸ்டேட்டுகள், பெரிய அளவில் தோட்டங்களை வைத்துள்ளவர்கள் மற்றும் வசதி படைத்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உறைபனியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க தேயிலை செடிகளின் மீது வைக்கோல் மற்றும் தாகை செடிகளை பரப்பி வைத்துள்ளனர்.

இதன் மூலம் பனியின் தாக்கத்தில் இருந்து செடிகள் கருகுவதை தடுக்க முடியும் என தெரிவித்தனர். மேலும் உறை பனியின் தாக்கத்தால் மலை காய்கறிகள் விவசாயமும் கடுமையாக பாதித்துள்ளது. எமரால்டு, இத்தலார், நஞ்சநாடு, போர்த்தி, முத்தொரை, பாலாடா, கல்லக்கொரை சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்பகுதிகளில் உறை பனி கொட்டுவதால் விவசாய நிலங்களில் ஈரத்தன்மையின்றி வறன்டு போயுள்ளது. இதனால் பயிர் செடிகள் வாடி வதங்கி காணப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் காய்கறி தோட்டங்களில் ஸ்பிரிங்களர், பூவாளிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி செடிகளை பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories: