செங்கல்பட்டில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த கனரக லாரி: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மோதி விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் சாலையில் சிதறிக்கிடந்த சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சென்னையை அடுத்த கும்மிடிபூண்டி பகுதியில் சிலிண்டரை உற்பத்தி செய்யும் நிலையம் இருக்கிறது. அங்கிருந்து லாரி மூலமாக தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணியானது தினந்தோறும் நடைபெற்றுவரும் நிலையில், கும்மிடிபூண்டியிலிருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துகொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே நிலைதடுமாறி வாகனம் பழுதானதை தொடர்ந்து, வாகனம் சாலை நடுவே கவிழ்ந்ததன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் சாலையிலேயே கொட்டப்பட்டது.

இதனையடுத்து அந்த சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். விபத்துக்குள்ளான லாரியின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 1 மணிநேரத்திற்கும் மேலாக சிதறிக்கிடந்த 200-க்கும் மேற்பட்ட  சிலிண்டர்களை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து மறைமலைநகரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது இந்த சிலிண்டர் விபத்தானது அப்பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை; சிலிண்டர்களும் துரிதமாக உடனுக்குடன் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து அந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: