கண்ணங்குடி பகுதியில் கருகிய நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தேவகோட்டை : தினகரன் செய்தி எதிரொலியாக தேவகோட்டை அருகே கண்ணங்குடி பகுதியில் கருகிய நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேவகோட்டை  தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நெல்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை கொண்டு  கண்ணங்குடி வட்டாரத்திலுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் நெல் சாகுபடியை  தீவிரமாக செய்து வந்தனர்.

நெற்பயிர்கள் நன்று வளர்ந்து வந்த தற்போது  அறுவடைக்கு தயராகி வந்தன. இந்நேரத்தில் நெல் மணிகள் திடீரென பதராகி சாம்பல்  போல் எரிந்து போயின. இதுகுறித்த செய்தி கடந்த ஜன.20ம் தேதி தினகரன்  நாளிதழில் விரிவாக வெளியானது. இதன் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட கலெக்டர்  மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் நேற்று கேசனி, களபம் கிராமங்களில் பாதிக்கப்பட்ட  ெநல் வயல்களில் நேரடியாக களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கேசனி கண்மாயின்  நீர்மட்டம் ஆழமில்லாமல் மேலே இருப்பதனால்தான் விளைநிலங்கள் உவர் நிலங்களாக  மாறி இதுபோல் பாதிப்பு ஏற்படுகிறதா என விவசாயிகள் சந்தேகம் தெரிவித்தனர்.  அதற்கு அதிகாரிகள், கேசனி கண்மாயை ஆழப்படுத்தி மராமத்து செய்ய அரசுக்கு  பரிந்துரைக்கப்படும் என்றனர். மேலும் கேசனி, களபம் கிராமங்களில் சிறப்பு  முகாம் நடத்தி மண் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனர். பின்னர்  விவசாயிகள், கருகிய நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என  தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக கலெக்டரிடம் பரிந்துரை  செய்யப்படும் என தெரிவித்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி  விவசாயிகள் கூறுகையில், ‘அறுவடைக்கு தயாராகி வந்த நெற்பயிர்கள் திடீரென  கருகி விட்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்றனர்.

Related Stories: